சட்டசபையில் மிசா குறித்துப் பேசியபோது முதல்வர் விஜயின் உடல் மொழி ஸ்டாலினை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி செப்டம்பரில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாஜி மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ. ராஜா பங்கேற்றுப் பேசியிருந்தார். அப்போது அவர் முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அவரது தாயார் குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், வக்கீல் கார்த்தி என்பவர் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆபாசமாகப் பேசுதல், தனிநபர் குறித்து அவதூறாகப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆ. ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திமுக மிரட்டலுக்கு அஞ்சாது..! ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்ல..! சேகர்பாபு ஆவேசம்..!!

மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி ஆ. ராஜா, திமுக மாஜி மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இருவரும் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர்.
திமுக எம்பி ஆ. ராஜாவிடம் 120 கேள்விகளும், மா. சுப்பிரமணியனிடம் 70 கேள்விகளும் கேட்டு அதனை எழுத்துப்பூர்வமாகப் போலீசார் பதிவு செய்தனர். நேற்று திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று ராஜா, மா. சுப்பிரமணியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சைதாப்பேட்டை காவல் நிலையப் பகுதியில் திமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஒருபக்கம் குழந்தைகள் மாயம்..! மறுபக்கம் அக்யூஸ்ட்டுகள் தப்பித்தல்.! DUMMY CM..! கண்டித்த உதயநிதி.!!