சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: சட்டமன்றத்தில் வருடா வருடம் சிஏஜி என்று ஒன்று இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லாம் உறுப்பினர்களாக இருந்தபோதுகூட, சிஏஜி அறிக்கையை அவையில் தாக்கல் செய்வார்கள். அது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது. அதைத் தாக்கல் செய்துதான் ஆக வேண்டும்.
அதுபோல அந்த சிஏஜி அறிக்கையை முதலமைச்சரிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். சிஏஜி அறிக்கை என்பது எப்போதுமே அரசாங்கத்திற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் சாதகமான சான்றிதழை கொடுத்துவிடாது.
நான் எல்லாம் நகராட்சியில் நான்கு முறை மேயராகவும், சேர்மனாகவும் இருந்திருக்கிறேன். பெரிய பெரிய மேயர்கள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் இன்டர்னல் ஆடிட் இருக்கிறது. அதற்குப் பிறகு எக்ஸ்டர்னல் ஆடிட் இருக்கிறது. அதற்குப் பிறகு சிஏஜியிடம் செல்கிறது.
இதையும் படிங்க: திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? கொந்தளித்த ஆர்.எஸ் பாரதி..!!
ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் ஒழுங்காகச் செலவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். எப்போதுமே செலவு செய்தது சரி என்று எழுத மாட்டார்கள். இது தேவையில்லாத செலவு என்று கூட குறிப்பிடுவார்கள்.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். அந்த சிஏஜி அறிக்கையில், “இந்த ஆயிரம் ரூபாயை மாதம் கொடுப்பது தேவையற்றது” என்று ஒருவர் எழுதுவார். அதற்கு, அந்த ஆடிட் ஆட்சேபனைக்கு அரசாங்கத்தின் சார்பில் விளக்கம் அளிப்பார்கள். “இது சமூக நலத்திட்டம். சமூகத்தில் இருக்கிற அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காகவும் இது வழங்கப்படுகிறது” என்று விளக்கம் அளித்துவிடுவார்கள். அதோடு அந்த விஷயம் முடிந்துவிடும்.
இதை வைத்துக்கொண்டு, அந்தக் காலத்தில் நாங்கள் படிக்கும்போது மூர் மார்க்கெட்டுக்கு அருகில் நிறைய வித்தைக்காரர்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு கூட்டமே அவர்களைச் சுற்றி நிற்கும். கீரி ஒன்று, பாம்பு ஒன்று இருக்கும். அந்த வித்தைக்காரன் என்ன சொல்வான்? “கீரிக்கும் பாம்புக்கும் சண்டை போகப்போகிறது” என்று சொல்லி, துண்டை விரித்து மொத்தமாக வசூல் செய்துவிடுவான். கடைசி வரையிலும் அதை விட மாட்டான்.
அதுபோலத்தான் இன்றைக்கு சேகர்பாபு தைரியமாகக் கேட்டிருக்கிறார். “விடு, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையைப் பார்த்துக்கொள்ளலாம். கீரி ஜெயிக்கிறதா, பாம்பு ஜெயிக்கிறதா என்று பார்ப்போம்” என்று சொல்கிறார். கீரி விட்டுவிட்டால், பாம்பு சாப்பிட்டுவிட்டுப் போய்விடும்.
ஆக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எந்தப் பழியைச் சொன்னாலும், அதைச் சந்தித்து வென்று காட்டிய தலைவரின் முன்னால் படமாக நிற்கிற கலைஞரோடு நான் எமர்ஜென்சி காலத்தில் இருந்திருக்கிறேன். இன்றைக்கு இருக்கிற இந்தப் பசங்களுக்கு எல்லாம் அது தெரியாது. பாதிப் பேர் அப்போது பிறந்துகூட இருக்க மாட்டார்கள்.
1967-க்கு முன்னாலும், 1977-க்கு முன்னாலும் என்னென்ன குற்றச்சாட்டுகளை எல்லாம் சொன்னார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அதேபோலத்தான் இப்போது நம்முடைய சேகர்பாபு சுட்டிக்காட்டிய விஷயமும்.
அதேபோல, பரந்தூர் விமான நிலையத்தை ஏன் கைவிடுவீர்கள் என்று கேட்டால், “ஜி ஸ்கொயர் இடம் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். “சென்னையிலிருந்து பரந்தூர் வரையில் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது? மொத்தத்தையும் அவர்தான் வாங்கிவிட்டார்” என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால், “ஒரு ஏக்கர் நிலம் கூட ஜி ஸ்கொயரிடம் கிடையாது” என்று பதில் சொல்லிவிட்டார்கள்.
நான் இன்றைக்கு இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். தைரியம் இருந்தால், என்னுடைய சந்தேகத்தைப் போக்குவது இந்த அரசாங்கத்தின் கடமை.
ஏனென்று சொன்னால், நீங்கள் ஒரு குற்றச்சாட்டை வைக்கும்போது, எங்களாலும் அதற்கு எதிராகக் குற்றச்சாட்டை வைக்க முடியும்.
இதேபோலத்தான் 1976-க்கு முன்னால் எம்.ஜி.ஆர். என்ன குற்றச்சாட்டு சொன்னார் தெரியுமா? அண்ணா சாலையில் இருக்கிற அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டு வைத்தார்கள். இன்றைக்கு நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா, அந்தத் தியேட்டர் யாருக்குச் சொந்தம் என்று சொல்ல வேண்டும். ஜக்கரியா சேட் என்பவருக்குச் சொந்தமான அந்த அண்ணா தியேட்டர் கருணாநிதிக்குச் சொந்தம் என்று கையெழுத்துப் போட்டு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருண் ஹோட்டல் ஒன்று இருந்தது. இப்போது 70 வயதில் இருப்பவர்களுக்குத்தான் அது தெரியும். அந்தக் காலத்தில் அந்த அருண் ஹோட்டல்தான் மிகவும் பிரபலமான ஹோட்டல். அந்த ஹோட்டலும் கருணாநிதிக்குச் சொந்தம் என்று எழுதி கொடுத்தார்கள்.
அதைவிட வேடிக்கை என்ன தெரியுமா? அண்ணா மேம்பாலமே கருணாநிதிக்குச் சொந்தம் என்று எழுதி கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட அறிவாளிகள் எல்லாம் எழுதி கொடுத்த அந்தப் புகாரை கலைஞர் வாங்கிக்கொண்டு சட்டசபையில், “பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்” என்று சொன்னார்.
அதோடு மட்டுமல்லாமல், குற்றச்சாட்டு கொடுத்தவுடன் அந்த சர்க்காரியா கமிஷன் தலைவர், வழக்கறிஞரான நீதிபதி சர்க்காரியா, “குற்றம் சாட்டிய எம்.ஜி.ஆர். கூண்டில் வர வேண்டும். நானே அவரை குறுக்கு விசாரணை செய்வேன்” என்று கூறினார்.
அதன்பிறகு, “ஐயயோ, எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று சொல்லி, ஆணானப்பட்ட எம்.ஜி.ஆரே எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார்.
அப்படிப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்தத் தற்குறிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!