கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியாக இருந்தவர். இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இவர், தவெகவில் இருந்து விலகி, மே 2025இல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வைஷ்ணவி, தவெகவை பாஜகவின் மற்றொரு வடிவமாக விமர்சித்து, அங்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், கட்சியில் ஆதிக்க மனோபாவம் நிலவுவதாகவும், இளம் பெண்கள் கட்சியை விட்டு விலகுவதாகவும் தெரிவித்தார். வைஷ்ணவியின் திமுக இணைவு, அவரது தாயார் திமுகவில் பொறுப்பு வகிப்பதால், அவரைப் பயன்படுத்தி பதவி பெற முயல்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், தவெக தொண்டர்கள் கேலியாக பதிவுகள் இட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: தவெக IN.. பாஜக OUT.. அமித்ஷா, அண்ணாமலைக்கு ஆப்பு.. இபிஎஸ்-ன் தகிடுதத்தோம் திட்டம்..!
இந்நிலையில் தவெக முன்னாள் உறுப்பினரான வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது தொண்டர்கள் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த மே மாதம் தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அவர், தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தன்னை கேலி செய்யும் வகையில் மீம்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு அவதூறு பரப்புவதாகவும், இதனை தவெக தலைவர் விஜய் கண்டிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவெகவில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசியல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், பெண்களை வீட்டுக்குள் முடக்கும் பிற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வைஷ்ணவி ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். “நான் கட்சிக்காக 5 லட்சம் ரூபாய் செலவு செய்தும், மூத்த உறுப்பினர்களால் புறக்கணிக்கப்பட்டேன்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக, தவெக தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ பதிலும் வரவில்லை. வைஷ்ணவியின் குற்றச்சாட்டுகள் தவெகவின் இளைஞர் மற்றும் பெண்கள் மத்தியில் செல்வாக்கை பாதிக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தவெகவை பாஜகவின் ‘பி’ அணியாக சித்தரிக்கும் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இந்த புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய்யின் தவெகவும் திமுகவும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. வைஷ்ணவியின் இந்த புகார், தமிழக அரசியலில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: அதிக உறுப்பினர் சேர்த்தா அடிக்குது பம்பர் பரிசு! பனையூரில் பக்கா ஸ்கெட்ச்.. விஜய் விறுவிறு!!