நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியாளர்கள் எவ்வாறு முறைக்கேடாக தேர்வு செய்யப்பட்டனர் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,500க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியது. தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்களின் படி, 2024ஆம் ஆண்டு 2,538 பணியிடங்களுக்கான நியமனத்தில், முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினுடைய அமைச்சர் கே. என். நேரு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். நியாயமான முறையில் தான் தேர்வுகள் நடைபெற்றதாக விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், டிஜிபிக்கு அனுப்பிய அந்த கடிதத்தோடு 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் இல்ல... அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பதிலடி...!
அந்த ஆவணங்களில் என்ன இருக்கிறது, இந்த முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என்று அமலாக்கத்துறை இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் அது குறித்த தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கிறது. அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 232 பக்க அறிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு, அவருடைய சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், டிவிஎச் உடைய பொது மேலாளர் ரமேஷ், உதவியாளர்களான செல்வமணி, கவி பிரசாத் ஆகியோருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியில் சேருவதற்கு முன்பு உதவியாளர்கள் மூலமாகவும், அமைச்சருடைய சகோதரர்கள் மூலமாகவும் அணுகி இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவருடைய செல்போன் உரையாடல்களை எல்லாம் எடுத்ததில் இந்த தேர்வு நடைபெற்று இந்த முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இடைத்தரகர்கள் மூலமாக சில பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதாகவும், அமைச்சருடைய சகோதரர்கள் மூலமாக சில பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதாகவும், அந்த பெயர்களை எல்லாமே வந்து பட்டியலிட்டு அந்த தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவே அவர்கள் வந்து தேர்வு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கு எல்லாம் அனுப்பிய குறுஞ்செய்தியில் நன்றி தெரிவித்து அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்கள் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பணி நியமன விவகாரத்தில் செயல்பட்ட சில இடைத்தரகர்கள் குறித்த சில ஆவணங்களையும் டிஜிபிக்கு அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சில செல்போன் உரையாடல்கள் மூலமாக 10 ரூபாய் தாள்களை வந்து ஹவாலா பணப்பரிமாற்றத்திற்கான சங்கேத மொழியாக பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த விவரங்களை எல்லாம் 232 பக்கம் கொண்ட அறிக்கையுடன் ஆவணமாக தாக்கல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. முறைகேடு தொடர்பான புகாரை மறுத்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்த நிலையில், அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணம் இருந்தால் தான் அரசு பதவியா? நகராட்சி நிர்வாகத்துறை ஊழலுக்கு தவெக கண்டனம்...!