புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-வது நினைவு நாளான இன்று (டிசம்பர் 24), அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உருக்கமான வாசகங்களுடன் அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், எம்.ஜி.ஆர். அவர்களை "உயிர்நிகர் தலைவர்" என்று போற்றி வணங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது பதிவில், தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயமாக எம்.ஜி.ஆர். விளங்கியதாக கூறியுள்ளார். வறியவர்களின் வேதனையைத் தன் வேதனையாகக் கொண்டு, அன்பையும் அருளையும் அரசியலாக்கிய மக்கள் திலகம் என்று அவரைப் போற்றியுள்ளார்.
அ.தி.மு.க.வை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிய வாழ்நாள் வழிகாட்டி என்று அழைத்துள்ளார். சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாட்டின் வரலாற்றை செதுக்கிய சிற்பி என்றும், திராவிட இயக்கத்தின் திரைமுகமாக எளிய மக்களிடம் கொள்கைகளைக் கொண்டு சேர்த்த பேராளுமை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை அதளபாதளத்தில் தள்ளிவிட்டார் இபிஎஸ்! அவரின் பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு! ஓபிஎஸ் ஆவேசம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியை மறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் கொள்ளைக் காடாக மாற்ற முயன்றபோது, அ.தி.மு.க.வை உருவாக்கி மக்களாட்சி விழுமியங்களைக் காத்த எம்.ஜி.ஆர். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "பாரத ரத்னா" இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளில் வணங்குவதாகக் கூறியுள்ளார்.
மேலும், எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட கழகத்தின் நோக்கத்தை மீண்டும் நிறைவேற்றி, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று உணர்த்தியுள்ளார். தி.மு.க. ஆட்சியை "மக்கள் விரோத விடியா ஆட்சி" என்று விமர்சித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் துணையுடன் அதற்கு முடிவுரை எழுத உறுதியேற்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் 1987 டிசம்பர் 24-ம் தேதி மறைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க.வினர் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நினைவு நாளில் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பதிவு கட்சி தொண்டர்களிடையே உணர்வுப்பூர்வமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எத்தனை தொகுதி? அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!! சூடுபிடிக்கும் தேர்தல்களம்!