தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமமுகவிடம் அதிமுக ஆதரவு கோர இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றிருந்தது. எனவே, வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதிமுக சார்பில் விருப்பமனுக்களும் நேற்று முதல் பெறப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!
அதேநேரத்தில், ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து ஆதரவு கோரவும் அதிமுக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், நேற்று தமிழக பாஜக நிர்வாகிகளை அதிமுக சார்பில் கமலாலயத்தில் சந்தித்து ஆதரவு கோரப்பட்டது. மேலும், அடுத்தடுத்து கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவோம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, வரும் 12ஆம் தேதிக்குப் பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னையில் சந்திக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்போது டிடிவி தினகரன் மதுரையில் இருக்கும் நிலையில், வரும் 11ஆம் தேதி இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்த உள்ளார். அதன்பிறகு, 12ஆம் தேதிக்குப் பின்னர்தான் அவர் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதன்பிறகு டிடிவி தினகரனை அதிமுகவினர் சந்தித்து, இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், பாமகவிடமும் அதிமுக ஆதரவு கோருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்தபோது, எடப்பாடி பழனிசாமி மீது அன்புமணி ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தேர்தல் சமயத்தில் பாமகவுக்கு எடப்பாடி பழனிசாமி சில வாக்குறுதிகளை வழங்கியதாகவும், ஆனால் அவற்றை இதுவரை அவர் நிறைவேற்றாத காரணத்தால் அன்புமணி ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தற்போது சந்திப்பு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அன்புமணி ராமதாஸும் தற்போது வெளியூரில் இருப்பதால், அவரும் 12ஆம் தேதிக்குப் பிறகுதான் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதன்பிறகு இந்த சந்திப்பு தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
ஆகவே, கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் அதிமுகவின் அடுத்தடுத்த நகர்வுகள் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கற்பு பறிப்போவது ஆணுக்கு தான்.! EPS பேச்சுக்கு சிபிஎம் எம்எல்ஏ லதா பதிலடி..!! MLA தாரகை வரவேற்பு.!