கல்லூரியில் இருந்து காரில் சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் எட்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த ஏழு மாணவர்கள், தங்களது கல்லூரி நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
திருச்சூர் மாவட்டம் கைப்பமங்களம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதியதில், அதில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!
இந்த கோர விபத்துக்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அதன் ஓட்டுநரின் நடவடிக்கை மற்றும் மாணவர்கள் காரை அதிவேகமாக இயக்கியது ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக கூறப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர்களில் சிலர் மது அருந்தியிருந்தது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவர்கள் மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், மாணவர்கள் கேரளாவில் உள்ள ஒரு விடுதியில் தகராறில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து அவசரமாக காரில் புறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
குருவாயூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கொடுங்கல்லூர் நோக்கி மாணவர்கள் காரில் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் வழியில் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், திருச்சூர் மாவட்டம் தளிக்குளம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்குவதற்கு மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
விடுதியின் முன்பு காரை நிறுத்தியபோது, அங்கிருந்தவர்களுடன் மாணவர்களுக்கு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, விடுதியில் இருந்தவர்கள் உடனடியாக செல்போன் மூலம் உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் அங்கு வருவதற்குள் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில், எட்டு மாணவர்களும் அவசரமாக காரை எடுத்துக்கொண்டு கொடுங்கல்லூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புறப்பட்டுள்ளனர்.
போலீசார் தங்களைப் பிடித்துவிடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்கள் காரை அதிவேகமாக இயக்கியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை 66-ல் சுமார் 16-வது கிலோமீட்டர் பகுதியில் அமைந்துள்ள கைப்பமங்களம் பகுதியில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்த நிலையில், அதில் பயணம் செய்த எட்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்துக்கு சாலையோரத்தில் சரக்கு லாரி நிறுத்தப்பட்டிருந்தது முக்கிய காரணமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், சில மாணவர்கள் மது அருந்தியிருந்ததும், அதனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறும், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் பதற்றத்துடன் காரை அதிவேகமாக இயக்கியதும் விபத்துக்கான காரணிகளாக அமைந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மாணவர்களை போலீசார் காரில் துரத்திச் சென்றதாக வெளியான தகவலை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!