அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். கட்சியின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாக செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் காலை நேரத்தில் புதுக்கோட்டை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முற்பகலில் கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் அரசியல் சூழ்நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளையும் அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலாளர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.கே. வைரமுத்து ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுக புதுக்கோட்டை மாவட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்... அதிமுகவில் மீண்டும் வெடித்த உள்கட்சி மோதல்!
இந்த மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக பழனிவேல், தெற்கு மாவட்டச் செயலாளராக ராமு, கிழக்கு மாவட்டச் செயலாளராக கலைச்செல்வன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் நேரடி ஆலோசனைக் கூட்டம் என்பதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாவட்ட அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை, கட்சி நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்துவது மற்றும் எதிர்கால அரசியல் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதி செய்யும் வகையிலும், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கூட்டுக் களவாணி பிளான் போட்டது நீங்க..!! கோடநாடு-ன்னா நடுங்குவீங்களே... இபிஎஸ்க்கு தவெக பதிலடி..!!