சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் அவர், வரும் 15-ஆம் தேதி முதல் மேலும் மூன்று நாட்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார். இந்தக் கூட்டங்கள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்வியால் கட்சியினர் மனமுடைந்து போக வேண்டாம் என்றும், அ.தி.மு.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதிய கட்ட ஆலோசனைகள் நடைபெற உள்ளன. ஜூலை 15-ஆம் தேதி காலை ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், பின்னர் திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், மாலையில் தேனி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க: உழைச்சவங்கள உதாசீனப்படுத்துறீங்க! ஓடுறவங்கள கொண்டாடுறீங்க! அதிமுகவில் மீண்டும் கலகக்குரல்! எடப்பாடிக்கு சிக்கல்!

ஜூலை 16-ஆம் தேதி புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், கடலூர் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி கரூர், நீலகிரி மற்றும் விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்கால வளர்ச்சி, அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்றும், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டங்களை சில எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், இந்த புறக்கணிப்பு கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டங்களில் அனைத்து நிர்வாகிகளும் முழுமையாக பங்கேற்பார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் தினகரனை சேருங்கள்!! அண்ணாமலையுடன் சேர்ந்து பயணியுங்கள்! எடப்பாடிக்கு குவியும் அட்வைஸ்!