ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.எல். ராஜா முறையிட்டுள்ளார். இதுதொடர்பாக முறையான மனுவாக தாக்கல் செய்தால், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் மனு விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி மீது சிறுமி தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, மேல்நடவடிக்கையை கைவிடும் வகையில் போலீசார் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து, வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய விசாரணை! புதிய திருப்பம்!

வழக்கில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் வீடியோ ஆதாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமி பின்னர் அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணையில் வேறு சிறுமிகள் தொடர்பான புகார்களும் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும் தற்போது கவனம் திரும்பியுள்ளது. போலீசார் ஏற்கனவே வழக்கை முடிக்க முயன்ற நிலையில், சிறப்பு போக்சோ நீதிமன்றம் அதை ஏற்க மறுத்தது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதன் பின்னணியில்தான் சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ விசாரணை கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டால், இந்த வழக்கில் அடுத்த முக்கிய கட்டமாக அது அமையலாம்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் உண்மையில் நடந்தது என்ன? திமுக மீது பழி? ரகுபதி வெளியிட்ட அதிரடி விளக்கம்!