தமாகா.வுடன் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணைந்தது. ஈரோடு வில்லரசம்பட்டியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில், தமிழருவி மணியன் தனது கட்சியை தமாகா.வில் இணைத்துக் கொண்டார். ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழருவி மணியனின் இணைவு அக்கூட்டணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே கட்சி இணைப்பு விழாவில் பேசிய ஜி.கே.வாசன், தமாகா.வுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது, அரசியல் களத்தில் தமாகா.விற்கு வசந்த காலம். காமக, தமாக இரு கண்களாக இருந்த கட்சி. ஒரே குடும்பமாக இன்று இணைகிறது என்றார். தமாகா.விற்கு யானை பலம் கிடைத்துள்ளது. நல்லவர்கள் நம்முடன் சேரும் காலம் இது. இதற்கு அடித்தளமிட்டுள்ளார் தமிழருவி மணியன். லட்சியத்திற்காகவும் கொள்கைக்காகவும் இணைந்துள்ளோம் என்றார்.
தொடர்ந்து, காமராஜர் மக்கள் கட்சியில் இருந்து வந்த 16 நிர்வாகிகளுக்கு ஜி.கே.வாசன் தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பதவிகளை அறிவித்தார். தமாக துணை தலைவராக ராசிபுரம் சிதம்பரமும், மாநில பொதுச்செயலாளராக குமரய்யா நியமனம். மாநில செயலாளர்களாக திருச்செங்கோடு பொன்.கோவிந்தலாஜ், நாமக்கல் சாந்தமூர்த்தி, கோவை தியாகராஜன், மதுரை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வார்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஆத்திரம்... தவாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்...!
கொங்கு மண்டல மகளிரணி செயலாளராக உதகையை வள்ளி கணேஷும், மீனா ராஜசேகரன் சென்னை மண்டல மகளிர்அணி பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொள்கை பரப்பு செயலாளராக திருப்பூர் சுரேஷ்குமாரும், தொழில்நுட்ப அணி செயலாளராக சுரேஷ்குமார் மற்றும் அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இலக்கிய பிரிவு பொதுசெயலாளர்களாக சுப்பரமணிய பாரதி, வரதராஜன் நியமனம் செய்யப்பட்டனர். கொங்கு மண்டல விவசாய அணி துணை தலைவராக குரு ரங்கதுரை நியமிகப்பட்டுள்ளார். மாநில பொதுக்குழு, செயற்குழுவில் புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “இதுதான் நமக்கான கடைசி சான்ஸ்...” - கோவை திமுக நிர்வாகிகளுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட செந்தில் பாலாஜி ...!