புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் மீண்டும் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வேகம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில், தேர்தல் கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பல்வேறு முடிவுகள் தொடர்பாக கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டது. வாக்காளர் சேர்க்கை, பெயர் நீக்கம், வாக்காளர் தரவுகளை அணுகுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த கருத்து வேறுபாடுகள் இருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதும் எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாருக்கு எதிராக மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய பதவி நீக்கத் தீர்மானத்துக்கான நோட்டீஸை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்துக்குள் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களுக்குள் மோதல்? தேர்தல் கமிஷன் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

இதற்கு முன்பாக, ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி மார்ச் 12 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்திருந்தன. ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நோட்டீஸில் 73 ராஜ்யசபா எம்.பி.,க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகள் தொடர்பான செய்திக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. உள்நிலை ஆலோசனைகளில் மாறுபட்ட கருத்துகள் தெரிவிப்பது இயல்பான நடைமுறை என்றும், கடந்த ஓராண்டில் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் முழு தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாகவும் ஆணையத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவை எதிர்க்கட்சியின் அரசியல் குற்றச்சாட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், செப்டம்பர் 25-ம் தேதி மாநில தேர்தல் ஆணைய அலுவலகங்களை நோக்கி போராட்டம் நடத்த காங்கிரஸ் தனது மாநில அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தை மையமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: கட்சி பெயர், சின்னம் முடக்கம்: தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி - மம்தா வழக்கில் முக்கிய உத்தரவு!!