பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு மறைந்ததையொட்டி, இட்லி இனியவன் என்றழைக்கப்படும் சமையல் கலைஞர் ஒரு தனித்துவமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். செஃப் தாமு விரும்பி உண்ணக்கூடிய இட்லியைக் கொண்டே மலர் வளையம் அமைத்து, 30 கிலோ எடையுள்ள பெரிய இட்லியில் அவரது முக உருவத்தைப் பதித்து நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
செஃப் தாமு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பரவலாக அறியப்பட்டவர். நீண்ட நேரம் சமைத்து கின்னஸ் சாதனை படைத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அவரது மறைவு சமையல் உலகில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், இட்லி வகைகளில் பல சாதனைகளைப் படைத்துள்ள இட்லி இனியவன், செஃப் தாமுவுக்குத் தனக்கே உரிய முறையில் அஞ்சலி செலுத்த முடிவு செய்தார். அவர் 30 கிலோ எடையில் ஒரு பெரிய இட்லியைத் தயாரித்து, அதில் செஃப் தாமுவின் முக உருவத்தைத் தீட்டினார். அதேபோல், ஏராளமான இட்லிகளைக் கொண்டு மலர் வளையம் போன்ற அமைப்பை உருவாக்கி, அதனை அஞ்சலிச் சின்னமாக வைத்தார்.
இதையும் படிங்க: திடீரென பற்றிய தீ..!! அலறிய அதிகாரிகள்..!! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு..!!
செஃப் தாமு இட்லியை மிகவும் விரும்பி உண்பவர் என்பதால், அந்த உணவையே அஞ்சலிக்குப் பயன்படுத்தியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. இட்லி இனியவன் உருவாக்கிய இந்தத் தனித்துவமான அஞ்சலி, சமையல் கலைஞர்களிடையே உள்ள பரஸ்பர மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த அஞ்சலிப் படங்கள் பரவி, பலரும் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING பட்டப்பகலில் பயங்கரம்... சேலத்தில் பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டிக்கொலை... நடந்தது என்ன?