சென்னை: டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இண்டி கூட்டணியின் பேரணியில், தமிழக காங்கிரஸ் சார்பில் 1,000 பேரை பங்கேற்கச் செய்ய வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்களை அழைத்துச் செல்வதற்கான பயணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது எனத் தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 1ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திலிருந்து 1,000 பேர் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் 50 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: காமராஜர் ஆட்சியே இலக்கு..! சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கு..! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி..!
இந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகிகளுக்கு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, டெல்லிக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், தொண்டர்களுக்காகத் தனியாக ரயில் பெட்டியை முன்பதிவு செய்ய அனுமதி கிடைக்காததால் விமானப் பயணத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சில கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விமானக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், பயணச் செலவைச் சமாளிப்பது சவாலாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். மாவட்டத்திலிருந்து 50 பேரை அழைத்துச் செல்வதுடன், அவர்களுக்கான பயணச்சீட்டு, தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளையும் ஏற்க வேண்டியிருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார வசதி உள்ள சில மாவட்டத் தலைவர்களுக்கு இந்தச் செலவுகளைச் சமாளிப்பதில் பெரிய சிக்கல் இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பேரணியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சில மாவட்டத் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியாக டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க மேலிடம் அழைப்பு விடுப்பதால், செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்ற கேள்வி மாவட்ட நிர்வாகிகளிடையே எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், பேரணிக்கான ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க: காங்கிரஸில் அதிகார மோதல்? ராகுல்–பிரியங்கா இடையே அதிகாரப் போட்டியா? - பாஜக விமர்சனம்!