தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்று முடிந்தது. காலை 11 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, மதியம் 12.20 மணிக்கு தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது. வெறும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானன.இதன் மூலம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இவை செயல்படுத்தப்பட்டால் 1,06,998 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் மொத்தம் ரூ.1,02,514 கோடி முதலீடுகளுக்கான 104 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 1.21 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
முக்கிய முதலீடுகளில் ஜெர்மனியின் பிட்செர் நிறுவனம் ரூ.300 கோடி, ஜப்பானின் ஒய்.கே.கே நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1,651 கோடி, டாய்ம்லர் நிறுவனம் ரூ.4,000 கோடி, பிரான்ஸின் செயிண்ட் கோபைன் ரூ.2,000 கோடி, ராமநாதபுரத்தில் ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமம் ரூ.1,000 கோடி, லூகாஸ் டிவிஎஸ் மின்சார வாகனத் துறையில் ரூ.2,500 கோடி, அக்னிகுல் காஸ்மோஸ் ரூ.400 கோடி, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ரூ.250 கோடி ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு..! பிரம்மாண்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு... அமைச்சர் கீர்த்தனா உறுதி..!!

தூத்துக்குடியில் லைன்ஹவுஸ் க்ரீன் நிறுவனம் ரூ.10,000 கோடி மதிப்பில் டேட்டா சென்டர் அமைக்க உள்ளது. இந்தத் திட்டங்கள் 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தவெக ஆட்சியின் முதல் மாநாடு என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கால அளவு குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வழக்கமாக இத்தகைய நிகழ்ச்சிகளில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டு முதலீட்டாளர்களுடன் உரையாட வாய்ப்பளிக்கப்படும். ஆனால் இம்முறை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இடநெருக்கடி காரணமாக ஊடகப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டாலும், அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர் சந்திப்பு நடத்தாததால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது என்பது ஊடகத் துறையினரால் சுட்டிக்காட்டப்படுகிறது. மாநாடு யூடியூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் மேலும் முன்னேற்றும் நோக்கில் இந்த முயற்சி அமைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு வந்த மெகா முதலீடு..! ரூ.67,452 கோடி..! ஒரே மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!!