தமிழகத்தில் இன்னும் 9 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. திமுக ஒரு கூட்டணியாகவும், அதிமுக பாஜக ஒரு கூட்டணியாகவும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு அணியிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணி என தற்போதைக்கு 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட போது தமிழகம் வந்திருந்த அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்தார்.

குறிப்பாக பாமகவை அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சிகள் ரகசியமாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. ஆனால், பாமகவில் தந்தை மகன் மோதல் இருந்து வருவதால் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணையுமா என்பது கேள்விகுறியாகியுள்ளது. ராமதாஸ் திமுக பக்கம் செல்ல விரும்புவதாகவும், அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், இதனாலேயே தந்தை மகன் பிரச்சினை நீடித்து வருவதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள்.... புது குண்டை தூக்கிப்போட்ட அமித்ஷா!!

இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 7 ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாள்குளத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிவதாக இருந்தது. மேலும் அந்த பயணத்தின் போது அதிமு பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவரது தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் - அன்புமணி இருவருக்கும் இடையே நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமித்ஷா சென்னை வரும் போது இருவரையும் சந்திக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் இருவருமே சமாதானம் ஆகாததன் காரணமாக அமித்ஷாவின் சென்னை பயணம் ரத்தாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை.. ஆணவத்தை நீடிக்க விட மாட்டோம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கு!!