பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தேசியத் தலைவராகப் பணியாற்றும் இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூர் கிராமத்தில் பிறந்த இவர், மதராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (வரலாறு) பட்டம் பெற்றார். மேலும், அரபு மற்றும் உருது மொழிகளில் டிப்ளோமா பெற்றுள்ளார்.

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் வரலாறு துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். துறைத் தலைவராக இருந்த இவர், 1980இல் அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்காக பணியை விட்டு விலகினார்.
இதையும் படிங்க: தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!
தன்னுடைய 14 வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தார் கே.எம்.காதர் மொகிதீன். முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளராகவும், பின்னர் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும், தேசிய பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 2017இல் IUML தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2025இல் மூன்றாவது முறையாக மீண்டும் IUML தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதுமட்டுமின்றி 2004-2009ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். உள்துறை மற்றும் மின்சார அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

மேலும் ஏழை மக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்குவதற்காக "நல்ல மனிதர் சங்கம்" தொடங்கினார். தமிழ்நாட்டில் மொஹல்லா ஜமாத் கூட்டமைப்பை ஒழுங்குபடுத்திய அவர், ஷரியத் கவுன்சில் அமைப்புகளை மேம்படுத்தினார். 8 ஆண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உட்பட ஆறு நூல்களை எழுதியவர்.
2024இல் முஸ்லிம் மிரர் இதழால் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 முஸ்லிம்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார் கே.எம்.காதர் மொகிதீன். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் IUML முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பலமுறை சந்தித்து, புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

தகைசால் தமிழர் விருது கடந்த 4 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த விருதைப் பெறுகிறார் காதர் மொகிதீன்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தகைசால் தமிழர் விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மூத்த அரசியல் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அன்புக்குரியவருமான பெரியவர், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும் இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காயிதே மில்லத்தின் 130வது பிறந்தநாள்.. நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!