தூத்துக்குடி: திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வரும் நிலையில், பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து எடப்பாடி விமர்சித்ததற்கு பதிலளித்த கனிமொழி, "நான் ராகுல் காந்தியை சந்திக்கும் போது முகத்தை மூடிக்கொண்டு போகவில்லை. நேரடியாகத்தான் சென்றேன். யார் யாருக்கு அடிமை என்று எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும்" என்று கடுமையாக தாக்கினார். இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வரும் பட்ஜெட் குறித்து பேசிய அவர், "நிதி ஒதுக்கப்படுகிறதோ இல்லையோ, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பெயர் நிச்சயம் இடம்பெறும். பலமுறை கேட்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்தார். வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடுவது குறித்த கேள்விக்கு, "பாஜக ஆட்சியில் எதையும் எதிர்பார்க்கலாம்" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவுல இருந்து வந்தாதான் மவுசா? உழைச்ச தொண்டனுக்கு ஒன்னுமில்லையா? திமுகவில் போர்க்கொடி தூக்கும் நிர்வாகிகள்!

தேமுதிகவுடன் கூட்டணி விவகாரம் குறித்து, "நான் எதுவும் பேசவில்லை. கூட்டணி உறுதியாக இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார். மக்களிடம் கோரிக்கைகளை சேகரித்து வருகிறோம். நிறைவேற்ற முடியும் என்றவற்றை தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம்" என்று தெளிவுபடுத்தினார். தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வரும் தகவல்களை மறுத்த அவர், "எனக்கு தெரியாது, நான் பேசவே இல்லை" என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு, பிறகு திறப்பு விழாவுக்கு வருவது குறித்து, "தூத்துக்குடி வின்ஸ் பாட் தொழிற்சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் அப்படித்தான் நடக்கின்றன" என்று சுட்டிக்காட்டினார். கனிமொழியின் இந்த நேரடியான பேட்டி திமுக-அதிமுக இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: யாருகூட கூட்டணினு சொல்லுங்க?! தொகுதி எத்தனைனு அப்புறம் பேசலாம்! தேமுதிக பிரேமலதாவுக்கு திமுக - அதிமுக ப்ரசர்!