கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகள் சமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், மாநில அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் பிறப்பித்ததாகக் கூறப்படும் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிக்கிம் மாநில ஆளுநராகப் பணியாற்றிய ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார்.
இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றார். கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சவுமென் சென் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உங்க லிமிட்ல நடந்துக்கோங்க! பினராயி விஜயன் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
அசைவ உணவுக்கு தடை எனத் தகவல்
பதவியேற்ற பின்னர் அலுவலகப் பணிகளைத் தொடங்கிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர், லோக் பவனில் அசைவ உணவுகள் சமைக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் கேரளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கண்டனம்
இந்த உத்தரவு தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளம் கலப்பு உணவுப் பண்பாட்டைக் கொண்ட மாநிலம் என்றும், கடலோரப் பகுதியாக இருப்பதால் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் அங்குள்ள மக்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சைவ உணவு உண்பவர்களும் அசைவ உணவு விரும்புபவர்களும் இணைந்து வாழும் மாநிலத்தில், மக்களின் உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உணவு தொடர்பான தனிப்பட்ட தேர்வுகளில் தலையிடுவது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கைதாகிறார் பினராயி விஜயன்? லஞ்ச ஒழிப்பு வழக்கில் இறுகும் பிடி?! அக்டோபர் 23-ல் என்ன நடக்கும்?