திருவனந்தபுரம், டிசம்பர் 13: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தம் 6 மாநகராட்சிகளில் 4 இடங்களில் யுடிஎஃப் முன்னிலை வகிக்கிறது.
ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஒரு மாநகராட்சியிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் பதவி வகிக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக கேரளாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறது.
இதையும் படிங்க: நயினார் டெல்லி ட்ரிப்! ஓபிஎஸ் கூட்டம் ஒத்திவைப்பு!! அப்போ அது கன்பார்ம் தானா?!
கடந்த டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இன்று (டிசம்பர் 13) ஓட்டு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் (கொச்சி), திரிச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. காலை 11 மணி நிலவரப்படி:
- எர்ணாகுளம் (கொச்சி) மாநகராட்சி (76 வார்டுகள், பெரும்பான்மைக்கு 39 தேவை): யுடிஎஃப் 44 வார்டுகளில் முன்னிலை. எல்டிஎஃப் 25, என்டிஏ 4, மற்றவர்கள் 5.
- திரிச்சூர் மாநகராட்சி (56 வார்டுகள், பெரும்பான்மைக்கு 29 தேவை): யுடிஎஃப் 34 வார்டுகளில் முன்னிலை. எல்டிஎஃப் 11, என்டிஏ 8, மற்றவர்கள் 4.
- கண்ணூர் மாநகராட்சி (56 வார்டுகள், பெரும்பான்மைக்கு 29 தேவை): யுடிஎஃப் 32 வார்டுகளில் முன்னிலை. எல்டிஎஃப் 11, என்டிஏ 4, மற்றவர்கள் 1.
- கொல்லம் மாநகராட்சி (56 வார்டுகள், பெரும்பான்மைக்கு 29 தேவை): யுடிஎஃப் 13 வார்டுகளில் முன்னிலை (முழு விவரங்கள் வரும்).
- கோழிக்கோடு மாநகராட்சி (76 வார்டுகள், பெரும்பான்மைக்கு 39 தேவை): எல்டிஎஃப் 26 வார்டுகளில் முன்னிலை. யுடிஎஃப் 20, என்டிஏ 9, மற்றவர்கள் 3.
- திருவனந்தபுரம் மாநகராட்சி (101 வார்டுகள், பெரும்பான்மைக்கு 51 தேவை): என்டிஏ (பாஜக கூட்டணி) 30 வார்டுகளில் முன்னிலை. காங்கிரஸ் கூட்டணி 14, எல்டிஎஃப் 20.
திருவனந்தபுரத்தில் பாஜகவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. இந்த மாநகராட்சியில் பாஜக முதல்முறையாக ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. மற்ற மாநகராட்சிகளில் யுடிஎஃப் ஆதிக்கம் செலுத்தி வருவதால், ஆளும் எல்டிஎஃபக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மெஸ்ஸியை பார்க்கமுடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் ஆவேசம்...! போலீஸ் தடியடி...!