கடந்த 40 தினங்களாக விஜய் காட்டிய மௌனம் கலைந்து, ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மூலம் தனது அரசியல் எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் துவம்சம் செய்துவிடப் போகிறார் என்று இன்று பலரும் எதிர்பார்த்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தங்களது கட்சிக் கூட்டங்களிலும் தேர்தல் மேடைகளிலும் மாநாடுகளிலும் அரசியலுக்காக ஆதாரமின்றிக் கூட சில விஷயங்களைப் பேசிவிடலாம் என்று தெரிவித்தார். திரைப்படங்களில்கூட வசனகர்த்தா எழுதியபடி வசனத்தை முழங்கிவிட்டுச் சென்றுவிடலாம்., ஆனால், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் அவ்வாறு பேச இயலாது., ஆதாரம் இல்லாமல் எதையும் பேசவும் கூடாது என்று கூறினார்.
டாஸ்மாக்கில் ”Party Fund” அதாவது, கட்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் என்று முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்த விஜய், எந்தக் கட்சிக்கு அந்த Fund சென்றது என்பது குறித்த ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தால், அது அரசியல் பூதாகாரமாக வெடித்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது இன்று அவர் வைக்கும் புதிய குற்றச்சாட்டும் அல்ல. கடந்த இரண்டு வருடங்களாக மேடைகளில் அவர் பேசிவரும் குற்றச்சாட்டு. அன்று அவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமே மே மாதம் 10ஆம் தேதிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று கூறியுள்ளார். கடந்த 40 நாட்களாக ஆட்சி - அதிகாரத்தில் இருந்தும், மாதம் சராசரியாக ரூ. 100 கோடி என ஆண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கு மேல் எந்தக் கட்சிக்குக் கைமாறியது? என்றும் அதன் நேரடிப் பயனாளிகள் யார்? என்பதை முழுமையாக ஆய்ந்து, அறிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழகச் சட்டமன்றத்தில் தனக்குக் கிடைத்திருக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து உண்மைகளையும் வெளியிட்டு இருந்தால் அற்புதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்!
அதைவிடுத்து மீண்டும் அதே குற்றச்சாட்டையே திரும்பத் திரும்பச் சொல்வதில் ”அரசியல் அசுரத்தனமே வெறுமையே” வெளிப்பட்டுள்ளது என்று கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்த்த அவரது குற்றச்சாட்டு, வெறும் ”புழுதிக்காற்றாகவே” போய்விட்டது. முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு நமத்துப்போன ’ரீல்ஸ்’களுக்குப் பயன்படுமே தவிர, ரியல் அரசியலுக்குப் பயன்படாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மலையாய் குவிந்த பிரச்சனை"..! தேவையற்ற பேச்சு... அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய H.ராஜா..!