மகாராஷ்டிரா மாநிலத்தில் 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 2 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணி (பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி) அபார வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி மஹா விகாஸ் அகாடி கூட்டணி (காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி) பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
246 நகராட்சிகளில் மஹாயுதி கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக 100, ஷிண்டே சிவசேனா 45, அஜித் பவார் என்சிபி 33 இடங்களை வென்றுள்ளன. எதிர்க்கட்சி கூட்டணி வெறும் 41 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. காங்கிரஸ் 26, உத்தவ் சிவசேனா 7, சரத் பவார் என்சிபி 8 இடங்களைப் பெற்றுள்ளன.
42 நகர பஞ்சாயத்துகளில் மஹாயுதி கூட்டணி 34 இடங்களையும், எதிர்க்கட்சி கூட்டணி 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. பாஜக மட்டும் 23 பஞ்சாயத்துகளில் வென்றுள்ளது. இந்த வெற்றியை பாஜகவும் மஹாயுதி கூட்டணி கட்சியினரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணிக்கு வெற்றி! காங்கிரஸ் கூட்டணிக்கு அடிமேல் அடி! மாபெறும் சறுக்கல்!

இந்த வெற்றிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் (ஈவிஎம்) முறைகேடு நடந்ததாகவும், தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் ஆசிர்வாதத்தால் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த முடிவுகள் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டது. ஆளும் கட்சி பணத்தை வாரி இறைத்ததாலும், ஊழல் நிறைந்த ஆட்சியாலும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜனநாயகமும் அரசியலமைப்பும் ஒடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
உத்தவ் தாக்கரே சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், “மஹாயுதி கூட்டணியின் வெற்றிக்கு ஈவிஎம்களில் நடந்த முறைகேடுகளே காரணம்” என்று குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் கூட்டணி இதை மக்களின் ஆதரவாகக் கொண்டாடி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஈவிஎம் முறைகேடு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் வன்முறை!! முகமது யூனுஸை வறுத்தெடுக்கும் ஷேக் ஹசீனா!!