ஈரோட்டில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அதிரடியான நிகழ்வில், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன் ஆற்றிய உரை, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் சக்தியாக உருவெடுத்து, எதிர்காலத் தமிழகத்தை ஆளப் போகின்ற விஜயைச் சந்தித்தபோது தான் வியந்து போனதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
‘விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என்று ஆணித்தரமாகச் சபதமேற்ற செங்கோட்டையன், “500 கோடி பணம் தேவையில்லையெனக் கூறி மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர் விஜய். என்னுடைய ரத்தத்தில், விஜயை முதல்வராக ஆக்க வேண்டும் என்ற எண்ணமே ஓடுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக விஜயை முதல்வராக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்,” என்று உறுதிபடக் கூறினார். மேலும், “இந்த இயக்கத்தில் இணைந்த பிறகு எனக்கு வெளிச்சத்தோடு வெளிச்சம் வந்துள்ளது. 2026-ல் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, விஜயிடம் ஒப்படைத்து அவரை முதல்வராக்கி, சிறந்த தமிழகத்தை உருவாக்குவோம்” என்றும் உறுதியளித்தார்.
கடந்த 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், தான் ஒரு பொதுச்செயலாளரை உருவாக்கியவன் என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், தன்னைப் ‘சாதாரண தொண்டனாகக் கூட இருக்கத் தகுதியற்றவன்’ எனக் கருதி நீக்கினர் என்று தனது மனவேதனையுடன் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: சட்டமன்ற தேர்தல் 2026: விஜய் முதல்வர் வேட்பாளராக இருந்தால் மட்டுமே கூட்டணி – நிர்மல் குமார் திட்டவட்டம்!
நிகழ்ச்சியில் பேசிய தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், செங்கோட்டையன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார் என்று சுட்டிக்காட்டினார். “செங்கோட்டையன் சொல்வதை விஜய் உள்ளிட்ட அனைவரும் கேட்பார்கள். அவர் போடும் ரூட்டில்தான் இனி விஜய் பயணிப்பார்” என்று வலியுறுத்தினார். விஜயை முதல்வராக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்று ஆனந்த் சபதம் எடுத்தார்.
"தவெகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகள் தான். ஆனால், அவர்களது குடும்பத்தினர் தவெகவிற்கு வாக்களிப்பார்கள். ஏனெனில் நீண்ட காலத்திற்குப் பிறகு உண்மையான தலைவர் கிடைத்துள்ளார்" என்று ஆனந்த் தெரிவித்தார். ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவோம் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
விஜயின் மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு அனுமதி பெறுவதில் செங்கோட்டையன் போராடி அனுமதி வாங்கியதையும் ஆனந்த் பெருமையாகப் பேசினார். “மேலிடத்திலிருந்து அழுத்தம் வருவதால், அவர் அப்படிச் சொல்கிறார்கள். நமக்குக் கொடுத்த இடத்தில் நாம் மக்கள் சந்திப்பு நடத்துவோம் எனச் சொன்னவர் செங்கோட்டையன்” என்று சுட்டிக் காட்டினார். பணம் தராமல் கூட்டம் சேருவதைக் கண்டு எல்லாக் கட்சிகளுக்கும் பயம் இருக்கிறது என்றும், சரியான ஆட்சி விஜய் தருவாரென நினைத்துதான் கூட்டம் சேருகிறது என்றும் ஆனந்த் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: தவெக மாஸ்டர் பிளான்; 'டிடிவி-ஓபிஎஸ் கூட்டணிக்கு காலம்தான் பதில்' - செங்கோட்டையன் பேட்டி!