தமிழக அரசியல் களத்தில் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்த கட்ட பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரலை என்ற இடத்தில் பிரமாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்காக, தவெக கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இணைந்து இடத்தை ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் துரிதப்படுத்தினார். இதற்காக 19 ஏக்கர் நிலப்பரப்பு ஆய்வு செய்யப்பட்டு, அதுவே சரியான களம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே தமிழகத்தில் முதல்முறையாக ஒரு பொது இடத்தை முறையாகத் தேர்வு செய்து நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால், இது மற்ற மாவட்ட நிகழ்வுகளுக்கு வழிகாட்டியாக அமையும் எனச் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, காவல்துறை அதிகாரிகள் 84 விதிகளை விதிமுறைகளாக வழங்கியுள்ளனர் எனவும், இந்தக் காவல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் செங்கோட்டையன் உறுதி அளித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அப்போதுதான் தெரிய வரும் என்றும், ஈரோட்டில் வாகனத்தில் நின்றபடி விஜய் உரையாற்ற உள்ள இந்தப் பேரணியில் சுமார் 25,000 நபர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறினார். புதுச்சேரியில் கியூ ஆர் கோடு முறை பின்பற்றப்படுவது குறித்த கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலடி கொடுத்தார். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றும், தமிழகம் அதன் எல்லைகள், அண்டை மாநிலங்களின் தாக்கம் என வேறுபட்டது என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: தவெக-வில் இணையும் நிகழ்வு: கோபிச்செட்டிபாளையத்தில் ஒரே நாளில் 1000+ உறுப்பினர்கள் சாரை சாரையாக வருகை!
விவாதப் பொருளாக உள்ள மற்ற கூட்டணி மற்றும் அரசியல் கருத்துகளுக்குப் பதில் அளிக்கும்போது, தி.மு.க செய்தித் தொடர்பாளர்களின் கருத்து அவருடைய தனிப்பட்ட உரிமை என்றார். மேலும், கியூ ஆர் கோடு மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றும், கூட்டம் அப்படியே சென்றுகொண்டிருக்கிறது என்பதையே தொலைக்காட்சி காட்சிகளில் கண்டதாகவும் கூறினார்.
தொண்டர்களுக்குரிய மரியாதை கொடுக்கும் கூட்டணியில் இணைவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து குறித்துக் கேட்கப்பட்டபோது, "ஒவ்வொருவரும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க எந்த வகையில் கூட்டணி அமையும், எந்த வகையில் விட்டுக்கொடுப்போம் என்ற ஃப்ளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் மக்கள் பார்ப்பார்கள்" என்று பதிலளித்தார். மேலும், டிடிவி மற்றும் ஓபிஎஸ் பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் இணைவார்கள் என்பது பற்றியும், டிடிவி தினகரன் தவெகவில் இணைவாரா என்பது பற்றியும் காலம்தான் பதில் சொல்லும் என்று கூறிய அவர், முன்னாள் அமைச்சர்கள் பலர் இணைவார்கள் என்று தான் தெரிவித்தால் அவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும், அவர்களது பெயரை வெளியிட முடியாது என்றும் செங்கோட்டையன் கூறினார்.
விஜயின் வாகனத்தின் மையப்பகுதியில் எம்ஜிஆர், அண்ணா மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் முதல் சுற்றுப்பயணத்தில் இருந்தே இடம்பெற்றுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இறுதியில், தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கே.கே. செல்வம் அ.தி.மு.க-வில் இணைந்தது குறித்த கேள்விக்கு, என்ன கேள்வி கேட்பது என்று கூடத் தெரியவில்லை என்று கூறிவிட்டுச் சட்டென அங்கிருந்து நகர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் பொதுக்கூட்டம்: அனுமதி மறுக்கப்படவில்லை; மாற்று இடத் தேர்வு: தவெக விளக்கம்!