முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மார்க்கண்டேயனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் மார்க்கண்டேயன் பேசியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனும் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாகவும், இதுபோன்ற அரசியல் போக்கு கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில், மக்களுக்குச் சேவை செய்வதற்கான தளமாக அரசியலை பார்க்காமல், அதிகாரத்தை தனிப்பட்ட வளர்ச்சிக்கான கருவியாக பயன்படுத்தியதன் விளைவாக சிலர் தோல்வியின் விரக்தியில் இவ்வாறான அநாகரிகமான பேச்சுக்களை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எலும்பை உடைப்பேன்!! முதல்வர் விஜய்க்கு மிரட்டல்?! திமுக எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பதால், இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். “எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்” என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்ச்சைக்கு காரணமான பேச்சு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் இடம்பெற்றது. அப்போது மார்க்கண்டேயன் பேசியதாவது: “விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும். சட்டமன்றத்தை கூட்டும் போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும்.” என்ற அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த புகாரின் அடிப்படையில், இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நானே பதிவு செஞ்சுட்டேன், நீங்க ரெடியா? மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்வர் விஜய் ட்வீட்!