தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் ரோடு ஷோ மேற்கொண்டு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து விஜய் ஏற்கனவே தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். தற்போது பிரச்சாரத்தின் இறுதி நாளான அக்டோபர் 4ஆம் தேதி ரோடு ஷோ மூலம் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிக்க உள்ளார்.
இந்த ரோடு ஷோவில் விஜய் சுமார் 114 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 23 இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுராந்தகத்தில் மேற்கொண்ட ரோடு ஷோவைத் தொடர்ந்து தாராபுரத்திலும் இதேபோன்று சாலையில் சென்று பொதுமக்களை சந்திக்கும் வகையில் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்..! சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி..! தவெக அரசுக்கு திருமா. நன்றி..!!
விஜய்யின் வருகையை முன்னிட்டு தாராபுரம் தொகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவர் பயணிக்கும் முக்கிய சாலைகள், புறநகர் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக செப்டம்பர் 30ஆம் தேதி தாராபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்திற்காக 34 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கூட்டத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டத்தின்போது சுமார் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது நாளைய ரோடு ஷோவையொட்டியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை பார்வையிடுவதற்காக கோவை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் தாராபுரத்தில் நடைபெறும் முதல்வர் விஜய்யின் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை இடுவதற்குக்காக வருகை தந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக முதல்வர் விஜய் தோல்வி பயம் காரணமாக மீண்டும் மீண்டும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், திரும்பத் திரும்ப ஒரு முதல்வர் மக்களை சந்திக்கக் கூடாதா? ஏன் புதிது புதிதாக கேள்வி எழுப்புகிறிர்கள் என்றார்.
இதனையடுத்து டென்ஷன் ஆன ஆனந்த் செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் காரில் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குறையும் வருவாய்... பெருகும் சுமைகள்... விஜய் அரசை விளாசிய கிருஷ்ணசாமி..!!