திண்டுக்கல் மாநகராட்சி 44-வது வார்டில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கோருவது மற்றும் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் சென்சார் போர்டு காட்டும் ஒருதலைப்பட்சமான போக்கு குறித்துத் தனது கருத்துக்களைக் காரசாரமாகப் பதிவு செய்தார்.
திண்டுக்கல்லில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும்மதத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சர் ஐ. பெரியசாமி பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்த கேள்விக்கு, "ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை; ஆனால், திமுகவைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதுமே கிடையாது. தனிப்பட்ட முறையில் திமுகவின் ஆட்சி தான் நடக்கும்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்" என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் தணிக்கைத் துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக முதல்வர் வைத்துள்ள குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மை என்றார். மேலும், வரும் தைத்திருநாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு ‘இனிப்பான’ புதிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட உள்ளார் என்ற ரகசியத்தையும் அவர் கசியவிட்டார். இந்த அறிவிப்பு பெண்களுக்கான புதிய நலத்திட்டமாகவோ அல்லது ஏற்கனவே உள்ள திட்டத்தின் விரிவாக்கமாகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! களத்தில் இறங்கிய திமுக..!! பிப்.8ல் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு..!!
இதையும் படிங்க: 49-வது சென்னை புத்தக காட்சி தொடக்கம்! 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கிய முதல்வர்!