திமுகவின் முன்னணி நிர்வாகியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்; ஆளும் தவெக அரசு தனது சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் மறைப்பதற்காகவே இத்தகைய அரசியல் காழ்ப்புணர்ச்சி கைது நடவடிக்கைகளில் இறங்கி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறது என்று அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காரசாரமான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அந்த அறிக்கையில்: "அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
இதையும் படிங்க: CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்குத் தொடக்கம் முதலே முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு மனப்பால் குடிக்கிறது.

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் வாயிலாகச் சட்டப்படி தைரியமாக எதிர்கொள்வார்.
அதேசமயம், இதுபோன்ற அடக்குமுறை மற்றும் பழிவாங்கும் கைது நடவடிக்கைகளால் தமிழக மக்களின் கொந்தளிப்பான கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் ஒருபோதும் நிச்சயம் ஈடேறாது!" என்று மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், குற்றச் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் கண்டன முழக்கங்களை எழுப்பி வருவதால் தமிழக அரசியல் களம் மேலும் பதற்றமடைந்துள்ளது.
இதையும் படிங்க: தாராபுரத்தில் அக்.2ல் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ பிரச்சாரம்: திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு!