தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் ஆய்வு மேற்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்னிலையில் மருத்துவரிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரவு நேர பணி மருத்துவர் உடனடியாக பார்க்க முடியவில்லை என கூறப்படுகிறது.
பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு அறையை பூட்டிக்கொண்டு உள்ளே மருத்துவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக தெரியவந்தது. அங்கு வந்த செவிலியர் கதவைத் தட்டி மருத்துவரை எழுப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கதவைத் தட்டியும் மருத்துவர் வெளியே வராததால், செவிலியர் தொலைபேசி மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டு மருத்துவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சரோஜாதேவியை மிஞ்சிவிட்டார் சத்யபாமா; நடுங்கிவிட்டார் விஜய்: தாராபுரத்தில் சீமான் ஆவேசம்!
இதையடுத்து வெளியே வந்த மருத்துவரிடம் எம்எல்ஏ சரவணன், இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், “இரவு நேர பணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் முறையாக பணியில் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக வந்தால் அவர்களின் நிலை என்ன? அவசர சிகிச்சை எவ்வாறு வழங்கப்படும்?” என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் முறையாக மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்திவிட்டு எம்எல்ஏ அங்கிருந்து சென்றார்.ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்னிலையில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களை கேள்வி கேட்பது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரல் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் நடத்துனரிடம் பேருந்து தாமதமாக வந்ததற்காக கேள்வி எழுப்பினார். மறுநாள் அவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்: தவெக அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!