2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முன்னெடுத்து வீடு வீடாக சென்று மக்களிடம் 4 ஆண்டுகளில் அரசு செய்த சாதனைகளை எடுத்துரைத்து புது உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. மற்றொருபுறம் அதிமுக சார்பில் ‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வீதி, வீதியாக மக்களைச் சந்தித்து வருகிறார்.
இப்படி இரண்டு திராவிட கட்சிகளும் மாறி, மாறி தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்னதாக பரப்புரையைத் தொடங்கிவிட்டன. நேற்று கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூட மதுரையில் 2வது மாநாடு நடத்த இன்று பூஜை போட்டுவிட்டார். இப்படி தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றும், நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்பதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. இதையே காரணமாக கூறி நிறைய மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் மாநில அளவில் பொறுப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் இன்று காலை திடீரென கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், சுற்றுச் சூழல் பாசறை மாநில செயலாளர் முகமது அலி ஜின்னா, ஐ.டி. விங் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.