சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மானசரோவர் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் 21 பேர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் சிக்கியுள்ள மேலும் பல இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேபாளத்தில் உள்ள திரிசூலி 1 திட்டத்தில் பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்களில் 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீனா உட்பட அனைத்து உலக நாடுகளுடனும் வர்த்தகம் அவசியம்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
அதில், நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்தியர்களின் நிலை குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளதாகவும், திரிசூலி 1 திட்டத்தில் பணியாற்றி வந்த 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேபாளத்தில் இருந்து இதுவரை மொத்தம் 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருவது அவர்களது குடும்பத்தினருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், நிலைமை முழுமையாக சீராகவில்லை. இன்னும் 290-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் நேபாள அரசு அமைப்புகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. தொடர்பு கொள்ள முடியாதவர்களின் குடும்பத்தினரிடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், மீட்புப் பணிகளின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையே, மானசரோவர் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட தகவலும், திரிசூலி 1 திட்டத்தில் பணியாற்றிய 63 இந்தியர்கள் மீட்கப்பட்ட தகவலும் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இதனால், நேபாளத்தில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களும் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?