ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. மறுபுறம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த அறிவிப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி வருகின்றனர். இதுக்குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

திமுக-வுக்கும், இண்டியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்ற திமுகவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் ஜாதிக்கு வெற்றி திமுக தேடுகிறதா? சமத்துவம் என்று சொன்னார்கள்? ஜாதியை பற்றிய விஷயத்தில் திமுக வெற்றி தேடுகிறதா? மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பை கொண்டு வருவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் தவறு ஒன்றும் இல்லை. பலபேர் கேட்டுள்ளனர். கேபினட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு எமனாகும் தெரு நாய்கள்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய CM மு.க.ஸ்டாலின்!!

இது எங்களின் வெற்றி என்று திமுக சொன்னால் ஜாதியை பற்றி திமுக பேசவே கூடாதே. அதனால் எல்லாவற்றிலும் அரசியல் ரீதியாக லாபத்தை தேட முயற்சி செய்யக்கூடாது. தமிழகத்தில் சமத்துவத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். எப்படியாக இருந்தாலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும். அதற்கான டேட்டா அனைவருக்கும் வரும். நாங்கள் போராடுவதால் தான் இது வந்துள்ளது என்று பெருமையாக கூற வேண்டாம். நான் இன்றும் செல்லும் போது சாலைகளில் போர்டை பார்க்கிறேன். ஜாதி பெயருடன் கூடிய போர்டு உள்ளது. ஜாதி விவகாரத்தில் மனித கழிவை இன்றும் குடிநீரில் கலக்கும் செயல் இந்த தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது.

இது வேறு எங்கும் நடக்கவில்லை. நாங்கள் நன்றாக முன்னேறி கொண்டு இருக்கிறோம். வடக்கில் சில மாநிலங்கள் முன்னேறவில்லை என்று சொல்கிறார்களே. அந்த மாநிலத்தில் கூட மனித கழிவை குடிக்கும் தண்ணீரில் சேர்க்கவில்லை. இதனால் இந்த விஷயத்தை அரசியல் ரீதியாக பார்க்காமல், அதில் இருந்து வரக்கூடிய டேட்டாவை வைத்து கொண்டு பின்தங்கியவர்களுக்கு எப்படி முன்னேற வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டுமே தவிர, நாங்கள் தோற்றோம். நீங்கள் வென்றோம் என்பது போன்ற பேச்சை விட்டு விட வேண்டும் என்று சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்... என்ன சொன்னார் தெரியுமா?