மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட பிரசாரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெஹாலா தொகுதியில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரோடு ஷோவின்போது பேசிய அமித் ஷா, “மேற்கு வங்கத்தில் இந்த முறை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. எந்தவித அசம்பாவிதங்களும் இல்லை. முன்பெல்லாம் தேர்தல் என்றால் எத்தனை உயிர்கள் பறிபோகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை” என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த அமித் ஷா, “முதல்வர் மம்தா, பாஜக பிரசாரக் கூட்டங்களில் மக்களைப் பார்க்க முடியாது என்று கூறுகிறார். வெளியே வந்து பாருங்கள், மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது தெரியும். வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

அப்போது அவர் முக்கியமாகப் பேசிய விஷயம் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code). “நாம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் ஒருவர் பல திருமணங்களைச் செய்து கொள்ளலாம் என்ற நிலை இருக்க முடியாது. இதுவே நமது நோக்கம்” என்று அமித் ஷா வலியுறுத்தினார்.
இந்தப் பேச்சு மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை அமித் ஷா மீண்டும் வலியுறுத்தியிருப்பது, மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் உத்தியை தெளிவாகக் காட்டுகிறது.
அமித் ஷாவின் ரோடு ஷோவில் பங்கேற்ற தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பாஜக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேற்கு வங்கத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதையும், பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதையும் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
வரும் நாட்களில் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவின் இந்தப் பேச்சு, பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு புதிய வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: கொல்கத்தா காளிக்கு பூஜை செய்த மோடி!! மேற்குவங்கத்தில் ரோடு ஷோ!! தேர்தல் விறுவிறு!