தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'ஆப்ரேஷன் மேகாலயா' வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வழக்கு, தவெக கட்சியைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜா மற்றும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. விஜய் ஆகியோரை பணம் கொடுத்து கட்சி மாறச் செய்ய முயற்சி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 12 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணன், சேதுராஜ் மற்றும் ராஜசேகர் ஆகிய மூவரை போலீசார் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றதாகவும், அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

மேலும், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை பலவீனப்படுத்தும் நோக்கில், 'ஆப்ரேஷன் மேகாலயா' என்ற குறியீட்டு பெயரில் தவெகவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கும் திட்டம் இருந்ததாகவும், காவல் விசாரணையில் வாக்குமூலம் அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது போலீஸ் விசாரணையில் பதிவாகியுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. இவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக செந்தில்பாலாஜி அல்லது அவரது தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளதா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அம்சங்களையும் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையின் அடுத்தகட்ட முன்னேற்றங்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: நேற்று திமுக... இன்று அதிமுக... எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எகிறி அடிக்கிறதா தவெக அரசு?