சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் பேச எழும்போது தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் குறுக்கீடு செய்வதும் உடனே அவர்களை பேச சபாநாயகர் அனுமதிப்பது அல்லது அனுமதியோ இன்றி அவர்கள் பேசுவது தொடர்கதையாகியுள்ளது. இதனை இன்று சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டி திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் பேசியதையடுத்து பெரும் விவாதமே வெடித்தது.
ஓபிஎஸ் பேசியதாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு சிறிய கருத்தை மட்டும் உங்கள் கவனத்திற்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் தலைவர் காலத்திலிருந்து, முத்தமிழறிஞர் காலம், அம்மா அவர்களின் காலம் வரை, இந்த சட்டமன்றத்தில் எதற்குத் தனி விதி இருக்கிறது, மரபு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குரிய மரியாதையை கண்டிப்பாக நீங்கள் வழங்க வேண்டும்.
அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், அமைச்சருக்கு எந்த அளவுக்கு அமைச்சரவையில் மரியாதை இருக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கும் மரியாதை இருக்கிறது.
இதையும் படிங்க: பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!
எதிர்க்கட்சித் தலைவரை நீங்கள் அழைக்கிறீர்கள். அவர் பேசிக்கொண்டிருக்கிறார். சட்டென்று பொதுப்பணித்துறை அமைச்சர் எழுந்து குறுக்கிடுகிறார். உங்களுடைய அனுமதியைக் கேட்கவில்லை. இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்?
அதுமட்டுமல்லாமல், போன வாரத்துக்கு முந்தைய வாரம் நீங்கள் அவரை அழைத்துவிட்டீர்கள். அவர் எழுந்து நிற்கிறார். பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் இன்னொருவரை அழைக்கிறீர்கள். இதுமாதிரி நான்கு முறை அவர் எழுந்து, எழுந்து உட்காருகிறார். இது எந்த விதத்தில் நியாயம் என்று நான் கேட்கிறேன்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், “நான் ஒரு கருத்தைச் சொல்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பற்றி பேசும்போது, அமைச்சரவை என்பது ஒரு கூட்டு முயற்சி. அங்கே இருக்கக்கூடிய எந்த அமைச்சராவது எழுந்து மாண்புமிகு முதலமைச்சருக்காகப் பேச வேண்டும். அப்படி பேசாவிட்டால், அங்கே அமர்ந்திருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் சொன்ன கருத்தை நான் கவனத்தில் வைத்துக்கொள்கிறேன். நீங்கள் சொன்ன கருத்தை நான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். இப்போது இரண்டு, மூன்று உறுப்பினர்களைப் பற்றி நான் சொல்லிவிடுகிறேன்.உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், உறுப்பினர் மதர் பருதீன், மதுரை, அதேபோன்று உறுப்பினர் டாக்டர் முத்துராஜா. தயவுசெய்து, வெளிமேடையில் இருப்பது போல உங்கள் இருக்கையை விட்டுவிட்டு, கையை உயர்த்திக்கொண்டு இங்கே ஓடிவருவதை நான் அனுமதிக்க முடியாது. அதை உங்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்கிறேன்.
நீங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறபோதே அந்தக் குறுக்கீடு உங்களிடமிருந்துதான் வருகிறது. நான் பார்த்துத்தான் சொன்னேன். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்களே எழுந்திருக்கலாமா என்று கேட்டேன்.
இருக்கையை விட்டு இனிமேல் முன்னோக்கி யார் கையை உயர்த்திக்கொண்டு ஓடி வந்தாலும், அது எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும், நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் பெரிதாக வெடித்த விவாதம்... அனல் பறந்த ‘பவுடர் மேட்டர்’... திமுக எடுத்த திடீர் முடிவு...!