சென்னை: சென்னை மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 10க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைய பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைந்த பிறகு வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் த.வெ.க. தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வுக்கு 151 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த 15 கவுன்சிலர்களில் ஐந்து பேர் ஏற்கனவே த.வெ.க.வில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலரும் த.வெ.க. பக்கம் திரும்புவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் கூறும்போது, “சென்னையில் தி.மு.க.வுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு பெருமளவு த.வெ.க.வுக்கு சென்றுவிட்டது. இதனால் மீண்டும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சந்தேகமாக உள்ளது. எனவே த.வெ.க.வில் இணைந்து, அக்கட்சி சார்பில் தேர்தலில் நிற்க விரும்புகிறோம்” என்றனர்.
இதையும் படிங்க: "போலீஸ் காரில் தான் வரணும்"..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது..! திமுகவினர் சாலை மறியல்..!

த.வெ.க. தரப்பில் இந்தப் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும், கட்சி மேலிடத்தில் ஆலோசனைக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க.வில் இணைந்த கவுன்சிலர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், மேலும் பலர் த.வெ.க.வில் இணைய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்த இணைப்புகள் சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். த.வெ.க. தொடங்கிய காலத்தில் இருந்தே நகர்ப்புறப் பகுதிகளில் இளம் தலைவர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்களின் இணைப்பு த.வெ.க.வுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதால், ஒவ்வொரு கட்சியும் தங்களது வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை மாநகராட்சியில் நடக்கும் இந்த மாற்றங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: "கட்சியை காப்பாற்ற களமிறங்கிய எடப்பாடி"..! தோல்விக்கு என்ன காரணம்..? EPS முக்கிய ஆலோசனை..!!