பழனி சுவாமிகள் மடத்தின் ₹100 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து உட்பட நால்வரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ₹2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கு தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டது. அரசின் உத்தரவையடுத்து, வழக்கு ஆவணங்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாகச் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க: பழனி கோயில் நிலத்தை பட்டா போட துணிந்தது எப்படி?... முக்கிய நபர்களை சுற்றி வளைக்க காய் நகர்த்தும் சிபிசிஐடி...!
சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் அலுவலகத்தில் முதற்கட்ட தகவல் அறிக்கை (FIR) தயார் செய்து, பழனியில் சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வும் மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 17.07.2026 அன்று சிபிசிஐடி தென்மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சஜிதா திண்டுக்கல் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார்.
அன்று புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன், கோயில் செயல் அலுவலர் கணபதி, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி மற்றும் வட்டாட்சியர் சஞ்சய் காந்தி ஆகியோரிடம் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று (20.07.2026), பழனி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் கூடுதல் பத்திரப்பதிவுத்துறை சுதா மல்லிகா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதேவேளையில், தென்மண்டல எஸ்பி சஜிதா பழனியில் நேரடியாக விசாரணை நடத்தினார்.
மேலும், பழனி கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று (21.07.2026) காலை 10.30 மணி முதல் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில், பழனி கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகிய நால்வரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சி பி சி ஐ டி போலீசார் ஆறாவது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சி பி சி ஐ டி எஸ் பி சாஜிதா தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக திண்டுக்கல்லில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!