பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸ்ஐ இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பா.ம.க.வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருள் இன்று செய்தியாளர்களை சந்தித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது: “தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என தெரியவில்லை.
அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி என்று பா.ம.க. உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது அதே ஆணையம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் அதை பதிவு செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டி? ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!?
மறுசீராய்வு மனு 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 72 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் உள்நோக்கம் என்ன என்பது எங்களுக்கு புரியவில்லை. கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸ்ஐ ஒரே நாளில் தூக்கி எறிய முயன்றனர்.

நீதிபதி அதற்கு அனுமதி தரவில்லை. நீதிமன்றத்தை விலைக்கு வாங்க முடியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தை வாங்கியுள்ளனர். பொய்யான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.”
இந்த குற்றச்சாட்டு பா.ம.க.வில் உள்ள பிளவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தேர்தல் ஆணையம் வரை சென்று நீதிமன்ற தீர்ப்பாக மாறியுள்ளது. அன்புமணி தரப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைமையை கையில் வைத்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு இதை ஏற்க மறுத்து வருகிறது.
தமிழக அரசியலில் பா.ம.க.வின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்த பிளவு கட்சியின் வாக்கு வங்கியை பெரிதும் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் மறுசீராய்வு மனு மீதான விசாரணை அடுத்த கட்டத்தில் என்ன திருப்பத்தை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: பா.ம.க. உட்கட்சி மோதல்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி மறுஆய்வு மனு!