அடுத்த ஆண்டு 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர அரசியல் பணியில் ஈடுப்பட்டு வருகிறார். மறுபுறம் தனது பேச்சால் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். பெரியார், கலைஞர் உள்ளிட்ட கட்சித்தலைவர்களையும், பிற மொழி பேசும் மக்களை சீமான் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்பும் கண்டங்களும் பெருகி வருகின்றன.

அவரது பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அவர், சமீபத்தில் தெலுங்கு சமூகத்தை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தெலுங்கு முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தெலுங்கு மக்களை வேண்டாம் என்று கூறும் சீமான் தனது மனைவியை விட்டு பிரிவாரா என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: விரைவில் தலை துண்டிக்கப்படும்..! சீமானுக்கு பகிரங்க மிரட்டல்..! தெலுங்கர்களுக்கு எச்சரிக்கை..!

இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சீமான் தலை விரைவில் துண்டாக்கப்படும். மேலும் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும், கூடிய விரைவில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இரங்கல் செய்தி வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை அடுத்து மிரட்டல் விடுத்த சந்தோஷ் மீதும், அவரது பதிவை டேக் செய்து பதிவிட்டுள்ள 4 நபர்கள் மீதும், அவர்கள் சார்ந்துள்ள இயக்கம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை சைபர் கிரைம் போலீசார் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவில் பொன்முடி, செந்தில் பாலாஜி விக்கெட்டுகள் காலி.. இனி தொடர்ந்து விக்கெட்டுகள் விழும்.. ஹெச். ராஜா தாறுமாறு!