சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) வழக்குகள் மற்றும் வழக்கு நிலவரங்களை வழக்கறிஞர்கள், பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொபைல் செயலியையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இது முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அளித்த சில முக்கிய இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே எட்டியதாக பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச முயற்சிகளிலும் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக அவர் கூறினார். இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை போக்குவரத்து, நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை முக்கிய இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!
மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்தும் பிரதமர் மோடி பேசினார். 2014-க்கு முன்பு ஆண்டுக்கு சில ஆயிரம் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நகர்ப்புற போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் மற்றும் ரயில்வே மின்மயமாக்கலும் சுற்றுச்சூழலுக்கு சாதகமான நடவடிக்கைகள் என பிரதமர் குறிப்பிட்டார். இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தினார். நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜல் சஞ்சய் ஜன் பாகிதாரி திட்டத்தின் கீழ் 2026 மே மாதத்துக்குள் 1.5 கோடிக்கும் அதிகமான நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“வளர்ச்சி வேகமாக இருப்பதுடன் நிலைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்திய பிரதமர், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நாட்டின் வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருக்கு என்ன ஆச்சு?! பேச்சை நிறுத்திய மோடி! உலக தலைவர்கள் கவனம் ஈர்த்த தருணம்!