பா.ம.க.வில் ஏற்பட்டிருந்த உட்கட்சி மோதலுக்கு பிறகு, கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன. அந்த வகையில், நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு கட்சியில் எந்தெந்த பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சென்னை பனையூரில் உள்ள பா.ம.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராமதாஸ் நியமித்திருந்த மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி செயலாளர்களில் யாருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை அன்புமணி கேட்டறிந்தார். கட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் 38-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அதை மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விழா நடத்தி அனைத்து கிராமங்களிலும் பா.ம.க. கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அன்புமணி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் நியமித்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று தனியாக ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்படி நட்டாற்றில் விடலாமா? இது நியாயமா? பாமகவில் மீண்டும் புகைச்சல்! ராமதாஸ் - அன்புமணி -ஸ்ரீகாந்தி பனிப்போர்!

இதற்கிடையில், ராமதாஸ் அணியில் இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. அருள், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். தந்தை-மகன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், ராமதாஸை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியவில்லை என்றும், தற்போது தங்களது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பா.ம.க.வில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் பொறுப்பு பங்கீடு குறித்து எடுக்கப்படும் முடிவுகள் கட்சியின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: "கரூர் போல"..! வன்னியர் தியாகிகள் குடும்பத்தினருக்கும் அரசு வேலை..! அன்புமணி வலியுறுத்தல்..!