பா.ம.க மாநில இளைஞரணி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கணேஷ்குமார் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அன்புமணி ஆதரவாளரான இவர் பேசுகையில், பாமக சார்பில் பிரச்சார பரப்புரை விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் திமுக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது.
தொழில் துறையில் ரூ.11 லட்சம் கோடி முதலீடு, 35 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததாகவும் பொய்யான தகவலை கூறியுள்ளனர். ஏற்கெனவே திமுக அரசின், தொழில்துறை உள்ளிட்ட நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பாமக ஆவணம் வெளியிட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளது. அதே போல, தொழில் துறையில் திமுக அரசு கொடுத்த பொய் வாக்குறுதிகள் குறித்தும் பிரச்சாரம் செய்யப்படும்.
இராமதாஸ், அன்புமணி இராமதாஸ் இணைப்பு குறித்த கேள்விக்கு, காலம்தான் அதனை தீர்மானிக்கும். உண்மை வெளிப்படும்போது இணைவார்கள். அதற்கான வாய்ப்புகள் 100% உள்ளது.
இதையும் படிங்க: "இனி பாமகவினர் மீது சுண்டு விரல் பட்டாலும்..." - அன்புமணி, செளமியாவை பகிரங்கமாக எச்சரித்த ராமதாஸ்...!
சேலத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உடன் வந்தவர்கள்தான், மாற்றுத்திறனாளி இளைஞர்களை தாக்கினார்கள். சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்படவில்லை. இது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். தொடர்ச்சியாக இதுபோன்ற விஷயங்களை முன்னெடுப்பது ஒரு விளம்பர அரசியலுக்கும் யாரையோ திருப்தி படுத்துவதற்கும் அந்த நபர் அப்படி செய்து வருகிறார் அது கண்டனத்திற்குரியதாகும்.
இந்த சம்பவத்தில், கட்சியின் உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சியும் கூட நடந்துள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு விவகாரத்தில், பாஜக வை காரணம் காட்டி, அதன்மீது பழி சுமத்தி, தமிழக மக்களை திமுக ஏமாற்றுகிறது.
2008 புள்ளியியல் சட்டத்தின்படி தேவையான சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும். இதற்காக இராமதாஸ், அன்புமணி இராமதாஸ் ஆகியோர் 3 முறை முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த போதிலும் அதனை அரசு செயல்படுத்தவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடந்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதனை திமுக அரசு செயல்படுத்தவில்லை.
ஏற்கெனவே, 2008 புள்ளியியல் சட்டத்தின்படி, பீகார், ஒரிசா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து, இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பணிகளில் அம்மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
ஆனால் சமூக நீதி பேசும் திமுக அரசு அதற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. பெரும்பான்மை சமூகமாக உள்ள வன்னியர் சமுதாயம் வளர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் வளர்ச்சி பெறும்.
60 ஆண்டு காலமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று தான் வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் தேவையான ஒன்று. பல இடங்களில் இரட்டை வாக்குரிமை, இறந்தவரின் வாக்குகள் ஆகியவை பட்டியலில் காணப்படுவதால், அதனை தீவிர முறையில் திருத்தம் செய்து நீக்க வேண்டும். இதனால் கள்ள ஓட்டுகள் போடுவதை தடுக்க முடியும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தை கூறி, சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான போலியான நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் திமுக தொடுத்த வழக்கினால் ஆளுநருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதால், பாமக சார்பில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் தரப்பட்ட தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவை சபாநாயகரிடம் பாமக 3 கடிதம் கொடுத்துள்ள போதும், தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் கூறுகிறார். தமிழகத்தில் ஆளுநருக்கு ஒரு நியாயம், சபாநாயகருக்கு ஒரு நியாயமா?.
ஆளுநருக்கும் சபாநாயகருக்கும் ஒரே மாதிரியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.திமுக அரசு காலம் தாழ்த்திவிட்டு, பாஜக-மீது பழி போடுகிறது. இதனை மக்கள் புரிந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இதையும் படிங்க: நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணி... மருமகள் செளமியா மீதும் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு...!