பாமகவில் (பாட்டாளி மக்கள் கட்சி) நடந்து வரும் உட்கட்சி மோதல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள் மோதலாக உருவெடுத்துள்ளன. இது கட்சியின் எதிர்கால அரசியல் உத்திகள் மற்றும் கூட்டணி முடிவுகளைப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாமகவின் இந்த உட்கட்சி மோதல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், சமூக ஊடகங்களில், பாமகவின் சாதி அடிப்படையிலான அரசியல் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு இழுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!!
இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 9ம் தேதி அன்று மாலை 6:30 மணியளவில், வீட்டு ஹாலை சுத்தம் செய்யும்போது ராமதாஸ் அமரும் நாற்காலிக்கு அருகே இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த இந்த கருவி, சிம்கார்டு உள்ளிட்டவற்றுடன் இருந்ததாக தனியார் துப்பறியும் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாமக தலைமைச் செயலாளர் அன்பழகன், விழுப்புரம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிளியனூர் காவல் ஆய்வாளர் கலையரசி தலைமையில் தனிப்படை, ராமதாஸ் மற்றும் வீட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது. இருப்பினும், ராமதாஸ் தரப்பு கருவியை உடனடியாக ஒப்படைக்க மறுத்து, தனியார் ஏஜென்சியின் முழு அறிக்கைக்குப் பின் ஒப்படைப்பதாக தெரிவித்தது. இது விசாரணையில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ், இந்த கருவியை வைத்தவர் யார் என்பது விரைவில் தெரியவரும் எனக் கூறியுள்ளார். பாமகவில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் மோதல் இந்த விவகாரத்திற்கு பின்னணியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி விழுப்புரம் கிளியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோட்டகுப்பம் டிஎஸ்பி உமாதேவியிடம் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஒட்டுக்கேட்பு கருவியை ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!