அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கிடையாது என்றும் அவரது பதவி காலம் முடிந்து விட்டதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் கட்சியைப் பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். தைலாபுரம் இல்லத்திற்கு என்னை சந்திக்க அன்புமணி வரவும் இல்லை, நான் கதவை அடைக்கவும் இல்லை என ராமதாஸ் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...
பாமக நிறுவனரும், தலைவரும் நானே என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். கட்சியை உறிஞ்சி எடுத்து நான் தான் கட்சி என்று சொல்ல அன்புமணி துடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அன்புமணியின் தலைவர் பதவி ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டதாகவும் தெரிவித்த ராமதாஸ், அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்க சொன்னதாகவும் தெரிவித்தார்.
நான்தான் தலைவர் என்று சொல்லிக் கொண்டு என்னவெல்லாம் அன்புமணி செய்வதாக விமர்சித்த ராமதாஸ், களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்காமல் என்னென்னவோ செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை சிலர் தன்னை கடவுள் என்கிறார்கள் என்று தெரிவித்த ராமதாஸ், பை பையாக பொய்களை அன்புமணி வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!