விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று நடைபெற்ற அங்காளம்மன் திருக்கோவில் மயான கொள்ளை திருவிழாவின் போது, பாமகவினர் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் இல்லம் அருகே இந்த மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு இதே பகுதியில் பாமக மற்றும் விசிக இடையே ஏற்பட்ட மோதல் போக்கைக் கருத்தில் கொண்டு, இந்த முறை பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருவிழா ஊர்வலத்தில் கட்சிக் கொடிகளைப் பயன்படுத்தவும், ராமதாஸ் இல்லம் அருகே கூட்டமாக நின்று நடனமாடவும் போலீசார் ஏற்கனவே தடை விதித்திருந்தனர்.

இருப்பினும், இன்று திருவிழா ஊர்வலம் டாக்டர் ராமதாஸ் இல்லம் எதிரே வந்தபோது, பாமகவினர் சிலர் தடையை மீறி அங்கு நின்று நடனமாட முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், பாமகவினர் போலீசாரின் தடையைப் பொருட்படுத்தாமல் அங்கேயே நின்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த போலீசார், கூட்டத்தைக் கலைக்க அதிரடியாகத் தடியடி நடத்தினர். இந்தத் தடிவீச்சில் அங்கிருந்த பாமக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் எனப் பலரும் சிக்கிப் பாதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

போலீசாரின் இந்தத் திடீர் தடியடியால் திருவிழா கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு, சிதறி ஓடிய பொதுமக்களில் பலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. தடியடிக்குப் பின்னரும் பாமக நிர்வாகிகள் சிலர் போலீசாருடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. பின்னர் போலீசார் அவர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திண்டிவனம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவிழா நேரத்தில் பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்ட இந்தத் தடியடிச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!