விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேமுதிக சார்பில் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் கேப்டன் ரத யாத்திரை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு உரையாற்றினர்.
முதலில் பேசிய விஜய பிரபாகரன், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கைநழுவிச் சென்றாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன். அவர் தொடங்கிய அன்னதானத் திட்டம் இன்றும் கேப்டனின் கோவிலில் தினமும் நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பிப்., 3-ல் கூட்டணி அறிவிப்பு!! மௌனம் கலைத்தார் பிரேமலதா? திமுக - அதிமுக - தவெக காத்திருப்பு!
மேலும், "கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தான் வெற்றி பெற்றார். ஆனால் அறிவிக்கப்பட்டது வேறொருவர். சில நாட்களுக்கு முன் நடந்த தேமுதிக மாநாட்டில் தொண்டர்கள் மூலம் நமது வெற்றி உறுதியானது" என்றும் தெரிவித்தார்.

பிரேமலதா தனது உரையில் உணர்ச்சிமிகு தொனியில், "கேப்டன் விஜயகாந்த் விட்டுச்சென்ற பணியை இதுவரை அண்ணியாக இருந்து செயல்படுத்தி வந்தேன். இனிமேல் அம்மாவாக மக்களின் குறைதீர்க்க பாடுபடுவேன்" என்று கூறினார். மக்கள் விரும்பும் கூட்டணியைத் தான் தேமுதிக கையில் எடுக்கும் என்றும், அந்த கூட்டணி நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் உறுதியளித்தார்.
"அப்போது மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தேமுதிக நிச்சயமாக செய்து கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார். இந்த பேச்சு தேமுதிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தற்போது தமிழக அரசியலில் தேமுதிக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த அறிவிப்பு கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்தின் பாரம்பரியத்தை தக்க வைத்து, மக்கள் மத்தியில் தேமுதிகவின் நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவை டீலில் விட்டு விஜய்க்கு டிக் அடித்த தேமுதிக!! பிரேமலதா சொன்ன முக்கிய மேட்டர்!!