திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, நாதக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் முறையாகப் பின்பற்றுவது குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சணா பட்நாயக், இன்று தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனையை நடத்தினார்.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, நாம் தமிழர் கட்சி (நாதக), சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த 'சுவிதா' (Suvidha) செயலி அல்லது அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களைக் கண்காணித்தல் மற்றும் சமூக வலைதள விளம்பரங்களுக்கான முன் அனுமதி பெறுதல் குறித்து விளக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் இருந்து தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஊண் உறக்கம் இல்லை! திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தொண்டர்களுக்கு முதல்வர் அழைப்பு!
இந்தத் தேர்தலில் முதல்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெற உள்ளது குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் 'சி-விஜில்' (cVIGIL) செயலி மூலம் உடனுக்குடன் புகார் அளிக்கலாம் என அர்ச்சணா பட்நாயக் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு, தேர்தல் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லவும், அரசியல் கட்சிகளிடையே நிலவும் சந்தேகங்களைத் தீர்க்கவும் உதவியாக அமைந்தது.
இதையும் படிங்க: ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!