சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் இளைஞர் அஜித்குமார். இவரை திருட்டு வழக்கில் விசாரணை மேற்கொள்ள போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இதில் சம்பத்தப்பட்ட காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதேபோல் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் சிவகங்கை மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை காவலர்கள் சீருடை கூட அணியாமல் அஜித்குமாரை மடப்புரம் காளியம்மான் கோயில் பின்புறம் பைப்பை வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நமது கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே சாக்கடை தண்ணி.. கொசு தொல்லை.. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!