இன்று காலை 10 மணிக்கு அரசியல் வருகை குறித்த தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்த ராகவா லாரன்ஸ் நேரலை மூலமாக பேசியுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம். ரஜினி சார் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தார். அறிவித்த உடனே நான் தலைவரைச் சந்தித்தேன். செய்திகளில் வருவது உண்மையா?” என்று கேட்டேன். “ஆமாம் கண்ணா, வரப் போகிறேன்,” என்றார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் வாழ்க்கையை உயர்த்தி வைத்தவர் அவர். அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது எல்லோரிடமும் நான் சொல்லிக் கொண்டிருந்தேன்: “தலைவர் வந்துவிட்டால் குழந்தைகளுக்காக இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் செய்ய முடியும். நானும் அவருடன் வருகிறேன் என்றால் அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்,” என்று. உடனே என் அறக்கட்டளைக்கு சென்றேன். என் ரசிகர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் அழைத்து உட்கார வைத்தேன். “தலைவர் அரசியலுக்கு வருகிறார்,” என்று சொன்னேன்.
எனக்கு படிக்கவும் எழுதவும் அதிகமாகத் தெரியாது. அதனால் ஒரு குழுவை அமைத்து, “இதற்கான திட்டங்களைத் தயாரியுங்கள்” என்று தமிழில் சொன்னேன். அவர்கள் அதற்கான வேலைகளைத் தொடங்கினர். அப்போது இன்னொரு குழு என்னிடம் கேள்விகள் கேட்டது. “தலைவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகிவிட்டால், நீங்கள் சுகாதாரத் துறை அமைச்சராகிவிட்டால் நிறைய அறுவை சிகிச்சைகள் செய்யலாம். கல்வித் துறை கிடைத்தால் நிறைய குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்,” என்றார்கள்.
இதையும் படிங்க: “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!
அதற்கு நான், “டேய், கடமையைச் செய்ய வேண்டும்; பலனை எதிர்பார்க்கக் கூடாது. சுகாதாரத் துறை, கல்வித் துறை என்று பதவிகளைப் பற்றிப் பேசுவதற்காக நான் வரவில்லை. கட்சி வளரட்டும், தலைவர் வரட்டும். எல்லாத் துறைகளிலிருந்தும் உதவிகளைப் பெற்று மக்களுக்கு நல்லது செய்வோம். ஒரு பெரிய அறக்கட்டளையை உருவாக்குவோம். இப்போது சிறிய அளவில் செயல்படுகிறோம். சிறிய வீட்டில் 60 பேர் இருக்கிறார்கள். நாளை 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய அறக்கட்டளை அமைத்து, ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவருக்கும் உதவி செய்யலாம்,” என்றேன்.
அப்போது ஒருவர்,“அண்ணா, உங்களை எதிர்த்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சீமானை எதிர்த்து அரசியலில் நிற்கலாம்,” என்றார். அதற்கு நான், “அது அரசியல் இல்லை. ஒருவர்மீது கோபத்தால் அரசியலுக்கு வந்தால் அது வெறுப்பு அரசியலாக மாறிவிடும். அரசியல் என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக வரவேண்டும். ‘அவரை அழிக்க வேண்டும், இவரை தோற்கடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு வந்தால் அந்த ஆசை கோபமாக மாறும். கோபத்திலிருந்து தவறான வார்த்தைகள் வரும். அப்போது மக்களுக்கு நம்மீது மரியாதை இருக்காது.
அதனால், ‘அவரை அழிக்கிறேன், இவரை எதிர்க்கிறேன்’ என்ற பேச்சை முதலில் விடுங்கள். நம் வேலையைப் பார்ப்போம். தலைவர் வருவதாக அறிவித்திருக்கிறார். அதைப் பற்றிய தகவலை வெளியிடுங்கள்,” என்றேன். அதன்பிறகு வீட்டுக்குச் சென்றேன். இங்குதான் என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் நடந்தது.
என் அம்மாவிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் முன் நான் ஒரு ஆச்சரியம் கொடுப்பேன். கோவில் கட்டியபோதும், சிலை அமைத்தபோதும், எல்லாம் முடிந்த பிறகுதான் அம்மாவிடம் காட்டினேன். அதேபோல், அரசியல் விஷயத்தையும் ஒரு ஆச்சரியமாகச் சொல்ல நினைத்தேன். அம்மாவையும் குடும்பத்தினரையும் உட்கார வைத்து, “அம்மா, தலைவர் அரசியலுக்கு வருகிறார். நானும் அரசியலுக்கு போகப் போகிறேன்,” என்று சொன்னேன். உடனே அம்மாவின் முகம் மாறிவிட்டது.
“கண்ணா, நீ அரசியலுக்கு போவது எனக்கு பிடிக்கவில்லை.” என்றார். “அரசியல் ஒரு சாக்கடை. ஓட்டு வாங்க பணம் கொடுக்கிறார்கள். ஜாதி இல்லை என்று சொல்கிறார்கள், ஆனால் ஜாதி இருக்கிறது. மதம் இல்லை என்று சொல்கிறார்கள், ஆனால் மதமும் இருக்கிறது. அந்த சாக்கடைக்குள் நீ போகாதே என்றார்.
அதன்பின்னர் “நான் அரசியலுக்கு வரவில்லை. மருத்துவர்கள் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது,” என்று ரஜினிகாந்த் அறிவித்தார். எல்லாமே ஒரே அதிர்ச்சியாக மாறிவிட்டது. வெளியே போக முடியாது, பிரச்சாரம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில் தலைவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது கூட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன. அப்படியே எல்லா திட்டங்களும் சரிந்து போகத் தொடங்கின.
அதேமாதிரி ஒருமுறை விஜயை சந்திக்கும் போது நான் அரசியலுக்கு வருகிறேன் என்றார். அவருக்கு உறுதுணையாக இருப்பது குறித்து அம்மாவிடம் பேசினேன். அப்போதும் அம்மா அரசியல் ஒரு சாக்கடை, சாதி, மதம் எல்லாம் இருப்பது. பணம் கொடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அது உனக்கு வேண்டாம் என்றார்கள். தேர்தல் ரிசல்ட் வந்தது, அப்போது தவெக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அப்போது அம்மாவிடம் சொன்னேன். பணம் கொடுக்காமல் என் நண்பர் வெற்றி பெற்றுவிட்டார். இப்போது என்ன சொல்கிறீர்கள் என கேட்டேன்.
அதற்கு என் அம்மாவும், ஆமாம் கண்ணா... அந்த புள்ள அனைத்துயுமே மாற்றிவிட்டார். நீ அரசியலுக்கு போ என சம்மதித்தார். இப்போது நான் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என மக்களாகிய நீங்கள் முடிவு கூறுங்கள். சோசியல் மீடியாக்களிலும், இந்த வீடியோவுக்கு கீழேயும் உங்கள் கமெண்ட்களை பதிவிடுங்கள் என மெகா ட்விஸ்ட் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: போதும்...! போதும்....!! - லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது... முதல்வர் விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஐ...!