கடந்த லோக்சபா தேர்தலின்போது கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த ராகுல் காந்தி, வழியில் ஒரு ஸ்வீட் கடையில் வாகனத்தை நிறுத்தி இனிப்பு பாக்ஸ் வாங்கி, அதை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்து இருவரும் மகிழ்ந்த காட்சி சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக இருந்தது. அந்த இனிப்பு பரிமாற்றம் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள நட்புறவை அழகாகப் பிரதிபலித்ததாகக் கருதப்பட்டது.
ஆனால் இந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டப் பிரசாரத்தில் ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 18, 2026) தமிழகம் வருகிறார். இருப்பினும், அவர் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது.
ராகுல் தனியாகவே பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தவெக கூட்டணி அமையாததால் தமிழகம் வர மறுக்கிறாரா ராகுல்காந்தி?! கிரிஷ் சோடங்கர் கொடுத்த ரிப்ளை!
இந்த நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இருவரும் பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். ராகுல் ஸ்டாலினை சந்திப்பாரா? மீண்டும் இனிப்பு பாக்ஸ் வாங்கி வருவாரா? அல்லது சந்திப்பே இல்லாமல் காரத்தை மட்டும் காட்டிச் செல்வாரா? என்று விதவிதமான யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளன.

குறிப்பாக, ‘தவெக தான் காங்கிரஸின் முதல் சாய்ஸ்; திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸுக்கு விருப்பம் இல்லை’ என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், ராகுலின் இந்தப் பயணம் அந்த யூகங்களை மேலும் வலுப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த முறை போல இனிப்பு பரிமாற்றம் இல்லாமல், ராகுல் தனியாக பிரசாரம் செய்வது திமுகவினரிடையே ‘திக் திக்’ மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரை விடவும் அதிக பதற்றத்தில் இருப்பதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ராகுல் காந்தியின் வருகை தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான உறவில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது.
தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், ராகுலின் இந்த ஒற்றை நாள் பயணம் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அவர் ஸ்டாலினை சந்திக்கிறாரா இல்லையா என்பதை நாளையே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?